SHIRDI LIVE DARSHAN

Sunday 15 July 2012

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி

ஓம் ஸ்ரீ குரு சித்தானந்தா சுவாமிகள் , பாண்டிசேரி 
 
 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjuhEZZq-n3jhaXoF9P4wrg7ee0_D-9rLkd-a8CvNiF8l0oiS_bbQKte7nYRpzV5CDNvsagJGfO-9w2RfJ1MO0OUF-Nn3TT93tncl7KTIJUWPAPw-0HZFvf0mPPzZRVRoVk4agbjYj7K-E/s320/scan0432.jpg
 
18-ம் நூற்றாண்டின் இறுதியில்,புதுவைக்கு அருகிலுள்ள கடலூரில்-வண்டிப்பாளையம் என்ற ஊரில் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பிறந்தார்.
பிறக்கும் பொழுதே இறையருளுடன் பிறந்ததால் அவர் வீட்டில்
லக்‌ஷ்மி கடாட்சம் இருந்தது.அவரின் வீட்டை “பிள்ளையார் வீடு”
என்றே சொல்வார்கள்.

சிறு வயது முதற்கொண்டே, திருப்பாதிரிப்புலியூரில் எழுந்தருளியுள்ள
ஸ்ரீ பாடலீஸ்வரரை-வழி பட்டு வந்தார்.இந்த ஆலயத்திற்கு
இவரது தாயார் பூத்தொடுக்கும் பணியை செய்து வந்ததால்,
ஆலயத்தில் மாலையை கொண்டு சேர்க்கும் பணியை சிறுவன்
சித்தானந்தன் செய்து வந்தார்.
அத்துடன் ஆலயப்பணியையும் செய்து வந்தார்.


ஒரு முறை தாயார் கொடுத்தனுப்பிய பூமாலைகளை,ஆலயத்திற்கு
கொண்டு செல்லும்பொழுது,கடுமையான மழையின் காரணத்தினால்
சமயத்தில் கொண்டு போய் சேர்க்கமுடியவில்லை,ஆலயத்தின்
கதவுகள் மூடியபிறகு போய் சேர்ந்ததால், கதவிலேயே கட்டி விட்டு-”இறைவா,உனக்கு தேவையானால் நீயே வந்து எடுத்துக் கொள்"
என்று சொல்லி வந்து விட்டார்.

மறு நாள் கோவில் அர்ச்சகர்,சித்தானந்தனை ஏன் மாலை கொண்டு
வரவில்லை என்று கேட்க,தான் கதவிலே கட்டி விட்டு வந்ததையும்
“இறைவனுக்கு” தேவைப்பட்டால் அவரே எடுத்து கொண்டிருப்பார்
என்றும் சொன்னார்.அர்ச்சகர் சிரித்து விட்டு போய் பார்க்க கோவில்
பூட்டப்பட்டிருந்தது. கதவில் கட்டி விட்டதாக சொன்ன மாலையை காணவில்லை.
உள்ளே சென்று பார்க்க இறைவனை அம்மாலை அலங்கரித்திருக்கக்
கண்டு ஆச்சரியப்பட்டுப் போனார்.உடனே சித்தானந்தனின் கால்களில்
விழுந்து வணங்கினார்.சித்தானந்தனின் சொற்கள் பலித்தன.

அத்தலத்தில் உள்ள ஸ்ரீ பெரியநாயகி அம்மனின் பாற் ஈர்க்கப்பட்டு.
விடாது தொடர்ந்து எய்தி வழிபட்டார்.எவரொருவர் அனைத்தையும்
இறைவனுக்கு சமர்ப்பித்துவிட்டு-”அவனே கதி”- என்று அவன்
பாதங்களில் விழுந்து கிடக்கின்றாரோ , அவரிடமே இறைவன்
ஒளி விட்டு பிரகாசிப்பான் .இறைவன் நம்முள் பிரகாசிக்கத்
தொடங்கினால் தான் இறையுணர்வு கிட்டும்.

எய்தி வழிபடில் எய்தாதன இல்லை
எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்
எய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
-திருமூலர்

எய்தி வழிபட்டார்.ஸ்ரீ பெரியநாயகி அம்மையின் திருவருள்
பெற்றார்- கடும் தவ பயனினால் .அட்டமா சித்திகளையும் பெற்றார்.
அவர் கைப்பட்டதுமே தீராத வியாதிகளும் தீர்ந்தன. அம்மையின்
அருளால் அவரின் புகழ் பல இடங்களிலும் பரவியது.

ஒரு சமயம்,புதுவையில்-முத்தியால்பேட்டை என்னும் பகுதியில்
வாழ்ந்து வந்தமுத்து குமாரசாமி பிள்ளை என்பவரின் மனைவி
அன்னம்மாளுக்கு தீராத வியாதி வந்தது.சிறந்த மருத்துவர்களை
கொண்டு சிகிச்சையளித்தும் ஒன்றும் பயனளிக்கவில்லை.
மிகுந்த துயரத்தில் வாடிய அக்குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல
வந்த ஒரு பெரியவர்-கடலூரிலுள்ள ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளின்
அருளைப் பற்றி தெரிவித்து, உடனே சென்று பார்க்க சொன்னார்.
அடியார்க்கு தொண்டு செய்வதை தன் பாக்கியமாக கருதும்
முத்துக்குமார சாமி பிள்ளையவர்களும் உடனே கடலூர்
பாடலீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சுவாமிகளை கண்டு
காலில் விழுந்து தன் கருத்தை தெரிவித்தார். சுவாமிகளும்
புதுவைக்கு வரச் சம்மதித்தார்.

சுவாமிகள் புதுவையை நெருங்கிக் கொண்டிருக்க
அன்னம்மாளின் நோயும் விலகிக் கொண்டிருந்தது.
வீட்டிற்கு வந்ததும் நோயும் பறந்தது.
தம்பதிகள் சுவாமிகளின் திருவருளை உணர்ந்து,தங்கள்
இல்லத்திலேயே அவரை தங்கும் படி வேண்டிக்கொண்டனர்.
சுவாமிகளும் இசைந்தார்.

பிள்ளையவர்களின் வீட்டிலேயே தங்கி தம் ஆன்ம ஞானத்தை
மேற்கொண்டார்.சுவாமிகளின் அருளை கேள்விப்பட்டு அப்பகுதியில்
உள்ள மக்கள் திரண்டு வந்து ஆசி பெற்று சென்றனர்.

ஒரு நாள் பிள்ளையவர்களுடன்,சுவாமிகள் கருவடிகுப்பம் வழியாக
சென்று கொண்டிருந்த பொழுது-பிள்ளை தன் தோட்டத்தை
காண்பித்தார். சுவாமிகள் உள்ளே சென்று பார்க்கலாம் என்று
சொல்லி விட்டு உள்ளே நடக்க ஆரம்பித்தார்.
ஓரிடத்தில் நின்று உற்று பார்த்து விட்டு,
“இது இங்கே தான் இருக்கப் போகிறது-இது இங்கே தான் இருக்கப்
போகிறது” என்று தம் உடலையும் அந்த இடத்தையும் மூன்று முறை
தம் விரலால் சுட்டி காண்பித்தார்.மற்றொரு இடத்தை காண்பித்து
பிள்ளையின் மனைவி சமாதியும் இங்கு தான் என்றார்.
முத்தியால்பேட்டையில் வசித்து வந்த முத்தைய முதலியார்,
சொக்கலிங்க முதலியார் போன்றோர்-சுவாமிகள் மேல் தீராத
பக்தியுடன் பூஜித்து வந்தனர்.சித்தரை பூஜித்தால்
சிவனையே பூஜித்தது போல் அல்லவா?
சுவாமிகளும் அவர்தம் இல்லங்களுக்கு
சென்று ஆசி வழங்குவார்.
ஒரு முறை முத்தைய முதலியாரின் மனைவி,பிரசவ வலியால்
துடித்துக் கொண்டிருப்பதை கண்டு-பொறுக்க மாட்டாமல்,
முதலியார், சுவாமிகளை தேடி ஓடினார்.சுவாமிகளிடம்
முறையிடும் முன்பே,முதலியாரின் உணர்வை
புரிந்து கொண்ட சுவாமிகள்,”கவலை படாதே ,உனக்கு ஆனந்தம்
தரும் ஆனந்தன் பிறந்து விட்டான்,சென்று பார்” என்று
ஆசிர்வதித்து அனுப்பினார்.
எங்கு, எது நடக்கிறது என்பதை ஞானக் கண்ணால் காணும்
பேராற்றல் படைத்தவர் சுவாமிகள்.
சுவாமிகள் சொன்னதை கேட்டு சந்தோஷம் கொண்ட
முதலியார் வீட்டிற்கு சென்று பார்த்தார்.அங்கு தாயும் சேயும்
நலமாக இருப்பதைக் கண்டு பெருமகிழ்ச்சியடைந்தார்.
ஆனந்தக்கண்ணீர் மல்கினார்.சுவாமிகளின் ஞான வாக்கு
அப்படியே நடந்ததை கண்டு பூரிப்படைந்தார். சுவாமிகளின்
திருவாக்கு படியே தம் மகனுக்கு “ஆனந்தன்” என்று பெயரிட்டார்.
ஒரு நாள் முத்துசாமி என்னும் பக்தர் இல்லத்திற்கு,நெல்லித்தோப்பு
வழியாக சுவாமிகள் சென்று கொண்டிருந்த பொழுது,
குடிகாரன் ஒருவன் சுவாமியை கிண்டல் செய்து வம்புக்கு
இழுத்தான். சுவாமியையும் சாராயம் குடிக்கச் சொல்லி
வற்புறுத்தினான். சுவாமிகள் அதனைக் கண்டு நடுங்கவில்லை.


ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனும் அங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே
--திருமூலர்


சுவாமிகள் சாராயம் பருகினார்.நிறைய பருகினார்.
பருக பருக குடிகாரனுக்கு போதை ஏறியது,
மேலும் மேலும் சுவாமிகள் சாராயம் பருக,குடிகாரன்
போதை தலைகேறி மயங்கி கீழே விழுந்தான்.

சுவாமிகள் சிரித்துக்கொண்டே சென்று விட்டார்.
பலமணியாகியும் குடிகாரன் எழுந்திருக்கவில்லை.
உறவினர்கள் கலங்கினர்,கண்ணீர் விட்டனர்,கதறி அழுதனர்.
பின் செய்வதறிந்து சுவாமிகளை கண்டு குடிகாரனை
மன்னிக்கும் படி மன்றாடினர். கருணையே உருவான சுவாமிகள்
அங்கு சென்று அவனை மன்னித்தார்.
மயக்கம் தெளிந்து எழுந்த குடிகாரன் தன் தவறை உணர்ந்து
சுவாமிகளின் காலில் விழுந்து,அழுது மன்னிப்பு கேட்டான்.
சுவாமிகளும் அவனுக்கு ஆசி வழங்கினார்.
ஆண்டுகள் பல கடந்தன. சுவாமிகளின் ஆத்மீக சாதனை
முடியும் நேரம் வந்து விட்டதை உணர்ந்தார். ஸ்ரீ பாடலீஸ்வர
பெருமானின் திருக்கட்டளைக்காக காத்திருந்தார்.

திடீரென்று ஒரு நாள் முத்துக்குமாரசாமி பிள்ளையை அழைத்து
“ஏவிளம்பி ஆண்டு வைகாசி மாதம் 28 ம் தேதி வெள்ளிக்கிழமை
அன்று எனக்கு கல்யாணம் நடக்கப் போகிறது-இதை எல்லோரும்
அறியும்படி செய் “ என்றார்.இந்நிகழ்ச்சி சித்தர் சமாதி அடைய
பத்து நாட்களுக்கு முன் நடந்தது.
நாட்கள் நகர்ந்தன.தாம் உபயோகித்த பாத குறடையும்
கைத்தடியையும் சொக்கலிங்க பிள்ளையிடம் கொடுத்து விட்டார்.
அன்று பத்தாம் நாள்.சுவாமிகளுக்கு அபிஷேகம் நடந்தது.
கற்பூர ஆராதனை நடந்தது. கற்பூர தீபம் ஜெக ஜோதியாக
உயர்ந்து உயர்ந்து எரிந்தது. தீப ஒளியில் சுவாமிகளை
அந்த சிவனாகவே கண்டனர்-பக்தர்கள்.


எங்குந் திருமேனி எங்குஞ் சிவசக்தி
எங்கும் சிதம்பரம் எங்குந் திருநட்டம்
எங்குந் சிவமாயிருத்தலால் எங்கெங்கும்
தங்குஞ் சிவனருள் தன் விளையாட்டத்தே
-திருமந்திரம்


ஓம் ஸ்ரீ சித்தானந்த சுவாமிகளை  ஒரு பெரிய மகான்,ஆத்ம ஞானி
என்ற சிந்தனையை மறந்து-பிரபஞ்சத்தை படைத்த
பரம்பொருளாகவே நினைவில் கொண்டு வணங்கினார்கள்.
கண்ணீர் மல்க வணங்கினார்கள். பத்மாசனத்தில் அமர்ந்த
சுவாமிகள் அப்படியே உள்ளாழ்ந்தார்.
பிராணன் பிரம்மக் கூட்டை விட்டு விலகியது. ஆத்ம சாதகர்கள்
சுவாமிகளின் பிரம்மத்தை தரிசித்தார்கள்.தங்களையே
மெய்மறந்தார்கள். கருவடிகுப்பத்தில்-முத்துகுமாரசாமி
தோட்டத்தில் -சுவாமிகள் சுட்டி காட்டிய இடத்தில்-சமாதி
கட்டப்பட்டு-சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
தற்பொழுது சுவாமிகளின் சமாதி ஒரு சிறந்த சிவாலயமாக
காட்சியளிக்கிறது.

ஆத்ம சாதகர்கள் தியானத்திற்காகவும்,பக்தர்கள் மன அமைதி
வேண்டியும் இங்கு வருகின்றனர்.நெறியான வேண்டுகோள்கள்
நிறைவேறுவதை எல்லோரும் கண் கூடாக காண்கிறார்கள்.
 
http://lh3.ggpht.com/_vnD4P42nTlU/S0TLqDQGKCI/AAAAAAAAALI/jvZA7LqbQt8/s512/IMGA0035.JPG

மகாகவி பாரதியார், ஸ்ரீ சித்தானந்த சுவாமிகள் பற்றி சிறப்பாக
பாடியுள்ள பாடல் இதோ ;

சித்தானந்தசாமி திருக்கோயில் வாயிலில்
தீபவொளியுண்டாம்; பெண்ணே
முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிட
மூண்ட திருச்சுடராம் ;பெண்ணே

உள்ளத்தழுக்கும் உடலிற் குறைகளும்
ஓட்டவருஞ் சுடராம்; பெண்ணே
கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்பட
காட்டவருஞ் சுடராம் ; பெண்ணே

தோன்று முயிர்கள் அனைத்தும் நன்றென்பது
தோற்ற முறுஞ் சுடராம்; பெண்ணே
மூன்று வகைப்படும் கால நன்றென்பதை
முன்னரிடுஞ் சுடராம்; பெண்ணே

பட்டினந்தன்னிலும் பார்க்க நன்றென்பதைப்
பார்க்க வொளிசுடராம்; பெண்ணே
கட்டு மனையிலுங் கோயில் நன்றென்பதைக்
காணவொளிர் சுடராம்; பெண்ணே




1 comment:

  1. மகானை பற்றிய தகவல்கள் அருமை நன்றி

    ReplyDelete