SHIRDI LIVE DARSHAN

Sunday 10 June 2012

தியானம் - எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையில்

 நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் சிறிதளவேனும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறோம். அது நம் மனத்தின் இயல்புகளில் ஒன்று. தியானம் என்று நாம் இன்று சொல்லி வருவது அந்த இயல்பானசெயல்பாட்டை இன்னும் விரிவாக, திட்டமிட்ட முறையில், முறையான பயிற்சியுடன் அமைத்துக் கொள்வதைத்தான்.
நம் மனம் நம்முள் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிரது. மனம் என்றால் என்ன என்றால் அதற்கு நமக்குள் ஓடு எண்ணங்களின் அறுபடாத நீட்சி என்று பதில் சொல்லலாம். மூளையின் நியூரான்களுக்கு இடையே நிகழ்ந்துகொண்டிருக்கும் தொடர்பாடலின் விளைவு இது என்று நரம்பியலாளர்கள் பதில் சொல்லக்கூடும்.
அந்த செயல்பாட்டை நாம் கூர்ந்து கவனித்தால் பிளாட்டிங் பேப்பரில் மை மரவுவது போல மிக இயல்பாக அது தன் விளிம்புகளில் இருந்து விரிந்து விரிந்து பரவிக்கொண்டே இருப்பதைக் காணலாம். அதற்கு இலட்சியம் இல்லை. அமைப்பு இல்லை. மையம் இல்லை. அதாவது நாமறிந்த எந்த ஒருங்கிணைவும் அதற்கு இல்லை. அது ஒரு தன்னிச்சையான பிரவாகம்.
ஆகவேதான் நம் தியான மரபில் மனதை மனச்செயல் என்றுதான் சொல்கிறார்கள். அது ஒருசெயல்பாடு. ஓர் அமைப்போ பொருளோ அல்ல. ஒவ்வொரு கணமும் அது நமக்கு தன்னைக் காட்டியபடியேதான் இருக்கிறது. நாம் நம் மனதை உணர்ந்த அக்கணமே மனம் இரண்டாகப்பிரிந்து ஒரு பகுதி நாம் ஆக மாறி மறுபகுதி நம் மனமாக ஆகி நாம் மனதைப் பார்க்க ஆரம்பிக்கிறோம். இது மிக விந்தையான ஒரு செயல். ஏனென்றால் நாம் பார்க்கிறோம் என உணர்ந்ததுமே நாம் பார்ப்பதை நாம் பார்க்க ஆரம்பிக்கிறோம்.
இந்த மனச்செயல் நின்று, அது இல்லமலாகிவிடுவதைப்போன்ற ஒரு தருணம் நமக்கெல்லாம் ஏற்படுவது உண்டு. ஒரு புத்தம்புதிய அனுபவத்தை நாம்  அறியும்போது நாம் சிலகணம் மனமிலாதவர்கள் ஆகிறோம். உடனே நாம் அப்படி இருந்ததை நாம் உணரும்போது அந்த நிலை கலைந்து மனம் செயல்பட ஆரம்பித்துவிடுகிறது. ஓர் இயற்கைக் காட்சியைக் காணும்போது சிலகணங்கள் அப்படி ஆகிவிடுகிரது. நல்ல இசை பலகணங்கள் அப்படி நம்மை ஆக்கிவிடுகிறது.
இக்கணங்களையே நாம் மெய்மறத்தல் என்று சொல்கிறோம். ஆழமான பொருள்கொண்ட சொல் இது– தமிழில் அடிப்படையான எல்லாச் சொற்களும் தத்துவகனம் கொண்டவை. நம் மரபு மெய் என்று சொல்வது உண்மை,உடல் இரண்டையும்தான். உண்மை என்ற சொல் உண்டு என்றசொல்லில் இருந்து உருவானது. அதாவது இருத்தல் .
உள்ளதே உண்மை. அதுவே உடல். இந்த நோக்கில் உடலே உண்மை. உள்ளம் என்னும் சொல் அதிலிருந்து வந்தது. உள்ளே இருப்பது உள்ளம். அங்கே நிகழ்வது உள்ளுதல் அல்லது நினைத்தல். அதாவது மனித இருப்பு என்பது உள்ளமும் உடலும் சேர்ந்த ஒரு நிலை. அந்த நிலையை முற்றாக மறந்த நிலையையே நாம் மெய்மறத்தல் என்கிறோம். உள்ளுதலும், உண்மையும் இல்லாமலாகும் கணம்.
அந்தச்செயலே இயல்பான தியானமாகும். நாம் ஒரு ஆழமான அனுபவத்தை அடையும்போது மெய்மறந்த நிலையில்  இருக்கிறோம். அப்போது நமக்குக் கிடைக்கும் எந்த அறிவும் நம் நினைவிலிருந்து மறைவதே இல்லை. நம்முடைய சிறந்த ஞானம் முழுக்க முழுக்க அந்த மெய்மறந்த தருணங்களில் நாம் அடைந்தனவாகவே இருக்கும். சொல்லப்போனால் கலையில் இலக்கியத்தில் பயணத்தில் நாம் தேடிக்கொண்டிருப்பதெல்லாம் மெய்மறக்கும் அந்த அனுபவத்தை மட்டுமே.
அந்த மெய்மறக்கும் தருணத்தில் என்ன நடக்கிறது? ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் நம் மனம் இல்லாமலாகிவிடுகிறது. ஒரு திரைபோல அது விலகிவிடுகிறது. அதற்கப்பாலுள்ள இன்னொரு ஆழம் திறந்துகொள்கிறது. அந்தக் கணத்தின் அனுபவத்தை அறிவது அந்த ஆழம்தான்.
ஓயாது நம்முள் ஓடும் மேல்மனதை– நாம் எப்போதும் அறியும் மனத்தை- ஜாக்ரத் என்றது நம் மரபு [விழிப்புமனம்] அதற்கப்பால் உள்ள மயக்கநிலைகொண்ட ஆழத்தை ஸ்வப்னம் [கனவுமனம்] என்றது. ஸ்வப்னம் என்பது ஒரு சுரங்கவழிப்பாதை. ஓர் ஊடகம் அது. அதன் வழியாக நாம் போவது மேலும் ஆழ்மான ஒரு பூரண மனத்தை. தன்னுள் தான் நிறைவுகொண்டு இயங்கும் ஆழம் அது. அதை சுஷ¤ப்தி [முழுநிலைமனம்] என்றது மரபு.
ஜாக்ரத்,ஸ்வப்னம்,சுஷ¤ப்தி என்ற மூன்றையும் துமி, நுரை, அலை என்று வைத்துக்கொண்டால் கடல்தான் துரியம் எனப்பட்டது.  அதாவது கடல்தான் இருக்கிறது. அதைத்தான் நாம் பலவாக பார்க்கிறோம். துரியம் என் மனமோ உங்கள் மனமோ அல்ல. அது முழுமனம். மானுடத்துக்கு பொதுவான மனம். காலங்கள்தோறும் நீடிக்கும் மனம். பிரபஞ்ச மனம். அந்த மனத்தின் தோற்றங்களே மற்ற மூன்றும்.
ஆகவே, நாம் நம் ‘மெய்மறந்த’ நிலையில் அடையும் அனுபவமென்பது நம் ஜாக்ரத் விலகி நிற்கும் ஸ்வப்ன நிலையே. அது மேலும் தீவிரமாக இருந்தால் ஸ்வப்னமும் விலகி சுஷ¤ப்தி நிலையை கொண்டிருக்கிறது. அது அதி உக்கிரமானதாக இருந்தால் அது துரிய நிலையை அடைந்துவிடுகிறது
நாராயணகுரு துரியநிலையை ‘அறிபவன், அறிவு, அறிபொருள்’ ஆகிய மூன்றும் ஒன்றாகி நிற்கும் நிலை என்று தன் அறிவு என்னும் நூலில் சொல்கிறார். பேதமில்லாத அந்த நிலையையே அத்வைதம் இரண்டின்மை என்று சொல்கிறது. சிறிய அளவிலேனும் இந்த இரண்டற்ற நிலையை சில கணங்கள் அனுபவிக்காத மனிதர்களே பூமியில் இருக்க மாட்டார்கள்.
அந்த நிலையை பயிற்சியின்மூலம் அடைய முடியுமா என்பதே தியான மரபின் நோக்கமாகும். இந்திய ஞானமரபில் தொல்பழங்காலம்முதலே அதற்கான பயிற்சிகள் ஆரம்பித்து விட்டன. இதை யோகம் என்றார்கள். யோகம்  என்றால் இணைதல் என்று பொருள். அறிபடுபொருளும் அறிபவனும் இணையும் நிலையை அப்படிச் சொன்னார்கள். தியானம் என்பது யோகத்தின் முதல்படி.
இந்திய மரபில் உள்ள எல்லா ஞானமுறைகளுக்கும் யோகம் பொதுவானது. என்றாலும் பௌத்தமரபிலேயே அதற்கு முதல்முக்கியத்துவம் . அதற்கடுத்தபடியாக சமணத்தில். பின்புதான் இந்து ஞான மரபுகளில்.
தொல்தமிழில் தியானம் ஊழ்கம் எனப்பட்டது. ஆழ்தல் என்னும் சொல்லுக்கு ஊழ்தல் என்னும் ஒலிமாறுபாடும் உண்டு . ஊழ்கம் அதிலிருந்து வந்தது. ஊழ்கம் செய்பவர்கள் ரிஷிகள் என்று சம்ஸ்கிருதத்திலும் படிவர் என்று தமிழிலும் சொல்லப்பட்டார்கள்.
பதஞ்சலி யோக சூத்திரமே இந்திய ஞானமரபின் முதன்மையான யோக நூலாகும். அதற்கு ஒரு உரை எழுத ஆரம்பித்தேன். இந்த இணையதளத்தில் இரு அத்தியாயங்கள் வெளியாகின. முடிக்கவேண்டும்.
தியானம் என்றால் எதுவெல்லாம் அல்ல என்று இப்போது தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று, வேண்டுதல் அதாவது பிரார்த்தனை என்பது தியானம் அல்ல. சமீபகாலமாக கிறித்தவ மத நிகழ்ச்சிகளில் அப்படிச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். லௌகீகமாகவோ அல்லது வேறுவகையிலோ நமக்குத்தேவையானவற்றை ஒரு சக்தியிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்வதற்குத்தான் வேண்டுதல் என்று பெயர். அது ஒருபோதும் தியானம் அல்ல.
தியானத்துக்கு ஒரு கடவுள் தேவை இல்லை. முன்னிலைச்சக்தி ஒறு தேவை இல்லை. தியானம் ஒருநிலையிலும் உலகியல் லாபங்களுக்கான அல்லது சொற்கத்துக்குப் போவதற்கான ஒரு வழிமுறை அல்ல. அது ஆழமான அறிதல் நிலை முழுமையான இருத்தல்நிலை ஒன்றை அடைவதற்கான யத்தனம் மட்டுமே.
வழிபாடுகள், தொழுகைகள், கூட்டுப்பிரார்த்தனைகள் ஆகியவற்றுக்கும் தியானத்துக்கும் முழுமையான வேறுபாடு உண்டு. இவை செயல்படும்தளமே வேறு. தியானம் கடவுள் சார்ந்தது அல்ல. தியானத்தில் தியானிப்பவன் மட்டுமே இருக்கிறான், அவனைச்சுற்றி அவன் அறியும் பிரபஞ்சம் இருக்கிறது. ஆகவே நாத்திகர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் எல்லாம் உரிய ஒரு வழிமுறை அது.
யோகத்தை நமக்கு ஒருவர் கற்றுத்தரவேண்டுமா என்றால் வேண்டியதில்லை என்றே சொல்லலாம். நம் மனதை நாம் கவனித்து அதன் இயல்புகளை உணர்ந்து மெல்ல மெல்ல ஒழுங்குபடுத்துவதற்கு புற உதவி தேவையே இல்லை. ஆனால் நடைமுறையில் தேர்ந்த உதவி இல்லாவிட்டால் பலவகையான வழிதவறுதல்கள் ஏற்பட்டு சக்திவிரயம் ஏற்படும்.
உதாரணமாக தியானத்தில் அமரும் ஒருவர் தன் மன ஓட்டத்தை தொகுத்துக்கொள்ள ஓர் ஒலியை — அதாவது தியானமந்திரத்தை — பயன்படுத்துவது வழக்கம். அவர் அதை தன் மூச்சுக்காற்றின் தாளத்துடன் இணைத்துக்கொண்டாரென்றால் அந்த ஒருமுகப்படுத்தல் இயல்பாக நிகழும். தியானம் நன்றாக நிகழ்வது போலவும் இருக்கும். பலவருடங்கள் இந்த மாயை நீடிக்கும். பின்னர் தெரியும் அவர் மனதை ஒருமுகப்படுத்தவில்லை, மூச்சுக்காற்றுக்கு ஒரு ஒலியை அளித்திருக்கிறார் என. மந்திரத்தை மூச்சுடன் இணைக்கக் கூடாது என்பது ஓர் அனுபவப் பாடம்.
அத்தகைய அனுபவ பாடங்களை நமக்கு அளிப்பவரே குரு. குரு இல்லாமல் தியானக்கல்வியை முழுமையாக அடைய முடியாதென்றே நினைக்கிறேன். ஞானிகளுக்கு அது ஒரு பொருட்டு அல்ல. குரு என்பவர் நம்மைந் அன்கறிந்த, நம் அந்தரங்கத்துக்குள் எளிதாக வரும் வல்லமைகொண்ட, நம் மீது அளவில்லாத பிரியம் கொண்ட ஒரு மனிதர். அவரது வழிகாட்டல்கள் நம்மைக் கொண்டுசெல்லும் அளவுக்கு நூல்கள் கொண்டுசெல்லாது என்பதே என் அனுபவம்.
இப்போது பல்வேறு யோக அமைப்புகள் யோகமுறைகளை கற்றுக்கொடுக்கின்றன. ஆரம்பநிலையில் அவை உதவிகரமானவை. அங்கே ஆரம்பவிதிகளும் அவற்றை பயிற்றுவிக்கும் வழிகாட்டுநர்களும் அங்கே உள்ளனர். அவர்கள் நம்மை ஓர் எல்லைவரை வழிகாட்டக்கூடும்– எனக்கு அவர்களிடம் அனுபவம் இல்லை. ஆனால் ஒரு தனிப்பட்ட குருவே அடுத்த கட்டங்களுக்குக் கொண்டுசெல்லமுடியும்.
மிக எளிய அடிப்படையில் ஆனாலும்கூட தியானம் மன அமைதிக்கும் சமநிலைக்கும் மிக மிக உதவிகரமானதுதான். ஆகவே எங்கே எப்படி தியானம் செய்தாலும் அது நல்லதுதான். ‘சரியான’ தியானமென்று ஒன்று இல்லை. ‘சரியான தியானத்தைச் செய்பவரே’  இருக்கிறார். தியானத்தை தொடர்ச்சியாக, விடாப்பிடியாக, கூர்ந்த அவதானத்துடன் செய்வதே முக்கியமானது.
தியானத்தின் வழிமுறையை மிக எளிமையாக இவ்வாறு விளக்கலாம். மனதைக் குவியச்செய்தல், மனதை அவதானித்தல், மனதை கரையவைத்தல் என்னும் மூன்றுபடிகள்
முதல்படி, மனதைக் குவியச்செய்ய முயல்வது. இது பிரிந்து பரவும் மனதின் இயல்புக்கு நேர் எதிரானது. இதன்மூலம் நாம் மனதின் கட்டற்ற இயக்கத்தை மெல்ல மெல்ல கட்டுக்குள் கொண்டுவருகிறோம். இதற்கான வழிகள் பல.  ஓர் ஒலியில் மனதை குவியச்செய்யலாம். இதற்கு மந்திரம் என்னும் பொருளில்லாத ஒலி [ஓம், ரீம் போல] உதவுகிறது. அல்லது ஒரு பிம்பத்தில் பார்வையைக் குவிக்கலாம். அல்லது இரண்டையும் செய்யலாம்.
மனதைக் குவித்தல் மிகமிக கடுமையான செயல். மனம் என்னென்ன மாயங்கள் காட்டும் என நாம் அப்போது அறிவோம். நாம் மனதைக் குவியச்செய்ய முயன்றால் மனதைக்குவியச்செய்யும் செயலைப்பற்றிய எண்ணங்களாக நம் மனம் ஆகிவிடும். எதைப்பற்றி எண்ணக்கூடாதென நினைக்கிறோமோ அந்த எண்ணங்களே அதிகமாக எழும். கூடவே அதை அடக்கும் எண்ணங்களும் அதே எண்ணிக்கையில் எழும்.
இவ்வாறு மனதைக் குவிக்க முனைகையில் தவிர்க்க முடியாமல் நாம் நம் மனதை கவனிக்க ஆரம்பிக்கிறோம். நம் மனம் எப்படி இயங்குகிறது என்பதைக் காணும்போது அதை மெல்ல மெல்ல புரிந்துகொள்கிறோம். நீங்கள் தியானத்தில் இருக்கும்போதுதான் நீங்கள் எத்தனைபெரிய சுயமையவாதி என்று தெரியும். நீங்கள் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்பது புரியும். உங்கள் அற்ப பாவனைகள் அற்ப ஆசைகள் சிறுமைகள் எல்லாமே தெரியும்.
அந்த அறிதல் மூலம் அவற்றை நீங்கள் தாண்ட முடியுமென்றால்தான் தியானம் கைகூடுகிறது என்று சொல்லமுடியும். தியானம் மெல்லமெல்ல பல காலமாக உங்களில் நிகழ்ந்து ஒரு கட்டத்தில் நீங்கள் சில கணங்கள் மனமிலா நிலையை அடையமுடியும். அப்போது ஒரு கணத்தில் நீங்கள் அறிவதை எத்தனை படித்தாலும் விவாதித்தாலும் அறிய முடியாதென அறிவீர்கள். அதுவே தியானம்.
ஆகவே தியானத்தை தொடங்குங்கள். சரியான பாதை என்பது முழுக்க முழுக்க உங்கள் கையில்தான் இருக்கிறது. இதில் சடங்குகள் ஏதுமில்லை. முறைகள் ஏதுமில்லை. ஒவ்வொரு மரபிலும் ஒவ்வொரு முறை உள்ளது. எல்லாமே சரிதான்- சரியாகச் செய்தால்.
இது ஒரு பெரிய அறிவியல்துறை. இதிலுள்ள ஏராளமான விஷயங்களை எளிதில் சொல்லிவிட முடியாது. செய்து பார்க்காமல் வெறுமே நூல்களைப் படிப்பதிலும் பொருளில்லை. செய்து பாருங்கள்.  அதில் எழும் கேள்விகளுக்கு நூல்களில் விடைதேடுங்கள்.

No comments:

Post a Comment